
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் சில பேருந்துகளின் வழித்தடங்களில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நேற்று (அக்.14) காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று இரவு தொடங்கி, சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையின் பல பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டு, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக இயக்கப்படும் சில பேருந்துகளின் வழித்தடங்களில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
* ஓ.எம்.ஆர். சாலையில் பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் எஸ்ஆர்பி, தரமணி, வேளச்சேரி, காமாட்சி மருத்துவமனை, ரேடியல் சாலை வழியாக சென்று துரைப்பாக்கம் சந்திப்பில் மீண்டும் ஓ.எம்.ஆர். சாலையில் தற்காலிகமாக இயக்கப்படுகிறது.
* 100 அடி சாலையில், எம்எம்டிஏ காலனி திரு நகர் அருகில் மழை நீர் தேங்கியுள்ளதால் அவ்வழியே கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயங்கும் பேருந்துகள் வடபழனி பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
* ஆவடி, அம்பத்தூரில் இருந்து கிண்டி மார்க்கமாக வரும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மட்டுமே தற்காலிகமாக இயக்கப்படுகிறது.
* கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி செல்லும் பயணிகள் தடம் எண் 104சி மற்றும் 104சிஎக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.