இன்று (ஆகஸ்ட் 13) பிரபல ரவுடி ரோஹித் ராஜை சென்னை சேத்துப்பட்டில் டி.பி. சத்திரம் காவல் நிலைய காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர்.
சென்னை டி.பி. சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ரோஹித் ராஜ். அண்ணாநகர், அமைந்தகரை, டி.பி. சத்திரம் காவல் நிலையங்களில் இவர் மீது கொலை வழக்குகள் உட்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார், தீச்சட்டி முருகன், ஃபைனான்சியர் ஆறுமுகம் ஆகியோரின் கொலை வழக்குகளில் நேரடியாகத் தொடர்புடையவர் ரோஹித் ராஜ்.
கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரோஹித் ராஜை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். இதை அடுத்து கடந்த வாரம் தேனியில் ரோஹித் ராஜ் பதுங்கியிருக்கும் செய்தி காவல்துறையினருக்குக் கிடைத்தது. இதை அடுத்து தேனிக்குச் சென்று ரோஹித் ராஜைக் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர் டி.பி. சத்திரம் காவல் நிலைய காவலர்கள்.
இன்று காலை ரோஹித் ராஜ் கொலை சம்பவம் மேற்கொண்ட இடங்களுக்கு அவரை நேரடியாக அழைத்துச் சென்று ஆய்வு செய்தனர் காவல்துறையினர். அப்போது காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சி செய்தார் ரோஹித் ராஜா.
இதனால் ரோஹித் ராஜா மீது காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ரோஹித் ராஜாவின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. இதைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரோஹித் ராஜா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரோஹித் ராஜன் தாக்கியதில் 2 காவலர்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.