வாகனங்களில் தாங்கள் பணிபுரியும் துறை சார்ந்த ஸ்டிக்கர்கள், சின்னங்கள் உள்ளிட்டவற்றை ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தனியார் வாகனங்களின் வாகனங்களில் தாங்கள் பணிபுரியும் துறை சார்ந்த ஸ்டிக்கர்கள், சின்னங்கள் உள்ளிட்டவற்றை ஒட்டுவதற்கு சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் தடை விதித்தது. மே 2 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாகவும், விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
"தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள்/குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனிநபர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பரவலான எதிமறை தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், காவல் துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.
இதைச் சரி செய்ய மே 1 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
எனவே தனியார் வாகனங்களில் தலைமைச் செயலகம், மின்சாரத் துறை, காவல்துறை, வழக்கறிஞர், மருத்துவர், போன்ற துறைகளின் பெயர்களை ஒட்ட இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அரசியல் கட்சிகளின் சின்னத்தையும் வாகனத்தில் ஒட்டுவதற்கு சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது.
ஊடங்களில் பணிபுரிபவர்கள் பெயரில் வாகனம் இருந்தால் அதில் ஊடகம் என ஒட்டிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தடையை மீறினால் முதல்முறை ரூ. 500, அடுத்தமுறை ரூ. 1500 அபராதமாக விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.