முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டம் இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ. தூரத்துக்கு மேலும் 3 வழித்தடங்களில் அமைந்து வருகிறது. இதன் பகுதியாக கலங்கரை விளக்கம் மற்றும் பூந்தமல்லி பணிமனை இடையே வழித்தடம் 4-ல் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முக்கியமான ஒரு மைல்கல் எட்டப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
"கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ. நீளம் கொண்ட வழித்தடம் 4-ல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளின் தொடர்ச்சியாக, இன்று (01.03.2025) முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல்லை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எட்டியுள்ளது.
பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு ஒரு மோட்டார் டிராலி வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டு, கிரேடு செப்பரேட்டர் கட்டுமானத்திற்காக தொடக்க புள்ளியாக நியமிக்கப்பட்ட தூண் எண். 424-ஐ அடைந்தது. கூடுதலாக, மேல்நிலை உபகரண (OHE) பணிகளுக்கான ஒரு முக்கியமான சாலை மற்றும் இரயில் வாகனம் பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, இது திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை குறிக்கிறது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனை இடையே கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த வழித்தடத்தை 2025 ஆம் ஆண்டின் இறுதியில் பயணிகள் சேவைக்காக திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் போது, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர்கள் எஸ். அசோக் குமார் (உயர்த்தப்பட்ட வழித்தடம்), ஏ.ஆர். ராஜேந்திரன் (மெட்ரோ இரயில்), பொது ஆலோசகர்கள் நிறுவனத்தின் தலைமை திட்ட மேலாளர் லத்தீப் கான் முகமது (வழித்தடம்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.