
2015 முதல் 2024 வரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை குறித்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம். இதன் மூலம், 2020-ல் இருந்து சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்துவருவது தெரியவந்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் இன்று காலை பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,
`2024-ம் ஆண்டில் 10.52 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட 9 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளார்கள். 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாகப் பயணித்துள்ளார்கள்.
2015 முதல் 2018 வரை 2.80 கோடி பயணிகளும், 2019-ம் ஆண்டில் 3.28 கோடி பயணிகளும், 2020–ம் ஆண்டில் 1.18 கோடி பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2.53 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6.09 கோடி பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9.11 கோடி பயணிகளும், கடந்த 2024-ம் ஆண்டில் 10.52 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளார்கள்.
29 ஜூன், 2015 (மெட்ரோ ரயில் ஓட்டத்தின் முதல் நாள்) தொடங்கி 31 டிசம்பர், 2024 வரை மொத்தம் 35.53 கோடி பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்’.