
நாட்டிலேயே முதல்முறையாக சென்னை திருமங்கலத்தில் 9 மாடி வணிக வளாக கட்டடம் அமைக்கப்பட்டு அதற்குள் மெட்ரோ ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட திட்டத்தில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான (44.6 கி.மீ.) 5வது வழித்தடத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அடுத்த ஓரிரு மாதங்களில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் திருமங்கலம் பகுதியில் வணிக வளாகத்துடன்கூடிய மெட்ரோ ரயில் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
அண்ணா நகர் மேற்கு பணிமனைக்கு எதிரிலும் (முதலாம் கட்ட) திருமங்கலம் மெட்ரோ நிலையத்திற்கு அருகிலும் அமைக்கப்படவுள்ள இந்த மாபெரும் திட்டத்திற்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர் என்று தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
3.85 ஏக்கர் நிலத்தில் கட்டப்படவுள்ள இந்த திட்டத்தில் இரண்டாம் கட்ட திருமங்கலம் மெட்ரோ நிலையம் மற்றும் நான்கு கோபுரங்கள் (ஏ, பி, சி மற்றும் டி) அமையவுள்ளன.
`ஏ’ மற்றும் `சி’ கோபுரங்களில் மூன்று கீழ் தளங்களும், ஒரு தரை தளமும், ஒன்பது மேல் தளங்களும் இருக்கும் என்றும், `பி’ கோபுரத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ நிலையமும், ஒரு தரை தளமும், ஒன்பது மேல் தளங்களும் இருக்கும் என்றும், `டி’ கோபுரத்தில் ஒரு தரை தளமும், இரண்டு மேல் தளங்களும் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.
ஏ, பி மற்றும் சி டவர்களின் தரை தளங்களில் சில்லறை விற்பனை மற்றும் பல்பொருள் அங்காடிகள் இருக்கும். முதல் மற்றும் இரண்டாவது மேல் தளங்கள் வணிக வளாகங்களைப் போன்ற அமைப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஐந்து முதல் ஒன்பது வரையிலான மேல் தளங்களில் பிரத்யேக அலுவலக இடங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.