

சென்னை சென்ட்ரல் மெட்ரோவிலிருந்து விமான நிலையத்திற்குக் கோயம்பேடு வழியாகச் செல்லும் பச்சை வழித்தடத்தில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலைக்குப் பச்சை வழித்தடத்திலும், விம்கோ நகர் பணிமனையிலிருந்து சைதாப்பேட்டை வழியாக விமான நிலையத்திற்உ நீல வழித்தடத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மெட்ரோ சேவையில் மாற்றம்
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில், ஆலந்தூர் ரயில் நிலையத்தைக் கடந்து உள்ள பகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதகவும், அதனால் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மெட்ரோ நிர்வாகம் சொல்வது என்ன?
இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
“தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்லும் பச்சை வழித்தடத்தில் நேரடி மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா நகர், கோயம்பேடு வழியாகச் செல்லும் பச்சை வழித்தடத்தில் விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, நீல வழித்தடத்தில் மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வழக்கம்போல் இயங்கும் மெட்ரோ
சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை செல்லும் பச்சை வழித்தடத்திலும், விம்கோ நகரிலிருந்து விமான நிலையம் செல்லும் நீல வழித்தடத்திலும் ரயில்கள் வார நாள்களின் அட்டவணையின்படி வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. சிக்கலைத் தீர்க்க எங்கள் தொழில்நுட்பக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மேலும் கூடுதல் தகவல்கள் விரைவில் பகிரப்படும். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், உங்கள் பொறுமைக்கு நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Metro Rail Announced that direct train service between Central and airport Via Koyambedu are temporarily suspended until further notice, due to a technical issue.