சென்னை மாநகராட்சி பெண் தபேதார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக மேயர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார், மாதவி (50). இவர் சென்னை மாநகராட்சியில் கடந்த மூன்றாண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை மேயர் பிரியாவுக்கு உதவியாக இருந்து வந்தார்.
இவருக்கு மேயர் பிரியாவின் தனி உதவியாளர் சிவசங்கர் கடந்த ஆகஸ்ட் 6 அன்று மெமோ அனுப்பியுள்ளார். நேரத்துக்கு வேலைக்கு வருவதில்லை, உயர் அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 அன்று அலுவலகத்துக்கு காலை 10 மணிக்குப் பதில் காலை 10.30 மணிக்கு வந்துள்ளார். காலில் காயம் ஏற்பட்டதன் காரணத்தால் தான் தாமதமாக வந்ததாக மாதவி தெரிவித்தார். மெமோவுக்குப் பதிலளித்துள்ள இவர் லிப்ஸ்டிக் போடக் கூடாது என்ற உத்தரவை மட்டுமே தான் பின்பற்றியதில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், ரிப்பன் மாளிகையிலுள்ள மற்ற துறையினர்களுடன் பேசக் கூடாது என்று நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
"லிப்ஸ்டிக் போடக் கூடாது என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நான் லிப்ஸ்டிக் போட்டு வந்து, உங்களுடைய உத்தரவை மீறியிருக்கிறேன். இது குற்றமெனில், நான் லிப்ஸ்டிக் போடக் கூடாது என்ற அரசாணையைக் காட்டுங்கள். பணி நேரத்தில் நான் வேலை பார்க்கவில்லையென்றால் மட்டுமே உங்களுடைய மெமோ செல்லுபடியாகும்" என்று பதிலளித்துள்ளார்.
இவர் பதிலளித்த சில மணி நேரத்தில் மேயர் அலுவலகத்திலிருந்து மணலி மண்டலத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்துக்கு இவர் பேட்டியளித்துள்ளார்.
மகளிர் தினத்தை முன்னிட்டு ரிப்பன் மாளிகையில் ஃபேஷன் ஷோ நடந்துள்ளது. இதில் மாதவி பங்கேற்றுள்ளார். இதில் இவர் செயல்பட்ட விதத்துக்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
"மேயரின் உதவியாளர்கள் என்னுடைய லிப்ஸ்டிக் அளவைக் குறைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து கூறி வந்தார்கள். பிரகாசமான சேலைகளை அணியக் கூடாது என்றும் விமர்சித்துள்ளார்கள். அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்கள் அருகிலிருந்தும் கூட மிகத் தொலைவில் உள்ள மணலி மண்டலத்துக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன்" என்றார் மாதவி.
இந்த நிலையில் லிப்ஸ்டிக் அளவைக் குறைத்துக்கொள்ள மறுத்ததன் காரணத்தால் மாதவி பணியிடமாற்றம் செய்யப்படவில்லை என சென்னை மேயர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மேயர் பிரியாவும் இதனைத் தெரிவித்துள்ளார்."அவர் அணிந்து வரும் லிப்ஸ்டிக் பளிச்சிடும் வகையில் இருந்தது. சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் அடிக்கடி வருவார்கள் என்பதால், என்னுடையத் தனி உதவியாளர் இந்த வகை லிப்ஸ்டிக்கை போட வேண்டாம் என அறிவுறுத்தினார். ஆனால், அவருடையப் பணியிட மாற்றத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை" என்றார் மேயர் பிரியா.