
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்தாண்டு டிசம்பரில் 2-ம் ஆண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் டிசம்பர் 24-ல் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது. இதனிடையே, ஞானசேகரனும் ஜனவரியில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.
சென்னை சைதாப்பேட்டை நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீது கடந்த பிப்ரவரி 24 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிறகு, இவ்வழக்கானது சென்னை அல்லிகுளம் மகளிர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறு, ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது என்று கூறி வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு ஞானசேகரன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மகளிர் நீதிமன்றம் ஏப்ரல் 8 அன்று இதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மகளிர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நிறைவுபெற்ற நிலையில், இன்று காலை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பை வாசித்தார். ஞானசேகரன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள 11 பிரிவுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2-ல் வெளியிடப்படும் என சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.