
சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 55 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவைக்கு உதவும் வகையில் புறநகர் ரயில்கள் செயல்பட்டு வருகிறது. புறநகர் ரயில் சேவையை நாள் தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வருகிற ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதிகாலை முதல் காலை 9.20 மணி வரையும், பகல் 1 மணி முதல் இரவு 10.20 மணி வரையும் கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் சிரமத்தை குறைப்பதற்காக, பல்லாவரம் - கூடுவாஞ்சேரி வரை இரு மார்க்கங்களிலும் கூடுதல் பேருந்து சேவைகளை இயக்குவதற்கு மாநில போக்குவரத்து துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல பயணிகளின் வசதிக்காக கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் செங்கல்பட்டிலும், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்ட புறநகர் ரயில்களுக்கு பதிலாக இயக்கப்படும் சிறப்பு புறநகர் ரயில்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.