சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தொடக்கம்

"160 நூல்களை மொழிபெயர்க்க இலக்கு வைத்துள்ளார்கள். இதில் 30 நூல்களை வரும் 18 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இங்கு வெளியிடுகிறார்."
சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தொடக்கம்
1 min read

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று தொடக்கி வைத்தார்.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 16, ஜனவரி 17 மற்றும் ஜனவரி 18 ஆகிய மூன்று நாள்கள் நடைபெறுகின்றன. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் புத்தகத் திருவிழாவை இன்று தொடக்கி வைத்தார். இதில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி உள்பட 60-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பதிப்பாளர்கள் பங்கெடுத்துள்ளார்கள்.

பன்னாட்டு புத்தகத் திருவிழாவைத் தொடக்கி வைத்த பிறகு அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"முதன்முறையாக ஆரம்பித்தபோது ஏறத்தாழ 24 நாடுகள் கலந்துகொண்டன. 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இரண்டாவது ஆண்டில் ஏறத்தாழ 40 நாடுகள் கலந்துகொண்டன. 750 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கும் மற்ற மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இது மற்ற நாடுகளுக்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலிருந்தும் வந்து தமிழ் மொழியில் உள்ள இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களுடைய மொழியில் மொழிபெயர்க்கிறார்கள்.

நாமும் மற்ற மொழிகளில் இருக்கக்கூடிய இலக்கியம் சார்ந்து இருக்கக்கூடிய நூல்கள் மற்றும் நல்ல நூல்களை தமிழுக்கு மொழிபெயர்கிறோம். இது ஆண்டுதோறும் வழக்கமாக நடக்கக்கூடிய நடைமுறை.

சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2025-ல் ஏறத்தாழ 64 நாடுகள் பங்கெடுத்துள்ளன. 1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

160 நூல்களை மொழிபெயர்க்க இலக்கு வைத்துள்ளார்கள். இதில் 30 நூல்களை வரும் 18 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் இங்கு வெளியிடுகிறார்.

தந்தை பெரியாரின் கருத்துகளை ஏறத்தாழ 16 மொழிகளில் மொழிபெயர்த்து அனுப்பியுள்ளோம். அறிவியல் சார்ந்து கல்வியைக் கொண்டு செல்வதையே, நாங்கள் பெரியாரின் கருத்துகளாக தான் பார்க்கிறோம்" என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in