
பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிப்பதாக, குவாரி விதிமீறல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் புரவிபாளையத்தில் செந்தாமரை என்பவர் 2009-ம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்தி வருகிறார். இவரது குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கையில் விதிமீறல் இருப்பதாக கூறப்பட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த கோவை மாவட்ட சர் ஆட்சியர், குவாரியில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாகக் கூறி கடந்த 2022-ல் செந்தாமரைக்கு ரூ. 32.29 கோடி அபராதம் விதித்தார்.
இதை எதிர்த்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் செந்தாமரை மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு விசாரணையின் முடிவில் சர் ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, ரூ. 2.48 கோடி அபராதம் செலுத்துமாறு செந்தாமரைக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் உத்தரவை தாமாக முன்வந்து இயற்கை வளங்கள் துறையின் அரசுச் செயலாளர் விசாரித்தார். முடிவில், ஆணையரின் உத்தரவை ரத்து செய்தும், கோவை சர் ஆட்சியர் விதித்த அபராதத் தொகையை உறுதிசெய்தும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தாமரை தொடர்ந்த வழக்கு, நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், குவாரியின் செயல்பாட்டில் எந்த விதிமுறையும் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குவாரியில் இருந்து சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி எடுக்கப்பட்ட கனிம வளத்திற்கு இணையான தொகையை வசூலிக்கவேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, `முறையான உரிமம் இல்லாமல் கற்களும், கிராவல் மண்ணும் மனுதாரர் எடுத்துள்ளது உறுதியாகியுள்ளது’ என்று கூறினார்.
மேலும், `நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றுவதற்காகத்தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும், தீராத பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கிறார்கள் என்றும்’ கூறி வேதனை தெரிவித்தார்.
மேலும், கோவை சர் ஆட்சியர் சரியான முறையில் அபராதம் விதித்துள்ளதாகவும், மனுதாரரிடமிருந்து 100 சதவீதம் அபராத தொகையை வசூலிக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.