
பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சாதி, மத ரீதியிலான அமைப்புகளின் கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
புதிய கொடிக் கம்பங்கள் அமைக்கவும், பழைய கொடிக் கம்பங்களை சீரமைக்கவும் மதுரை மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்காததால், அதற்கு அனுமதிகோரி மதுரை அதிமுக பிரமுகர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தொடர்பாக நீதிபதி ஜி. இளந்திரையன் விசாரித்தார். அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் அனுமதியில்லாத கட்சிக்கொடிக் கம்பங்கள் தொடர்பாக 144 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக அரசுக்குப் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை ஒத்திவைத்தார் நீதிபதி இளந்திரையன்.
இந்நிலையில், கொடிக் கம்பங்கள் தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் இன்று நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கில் விரிவான உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி இளந்திரையன்.
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி, மதரீதியான அமைப்புகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி. மேலும், அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கொடிக் கம்பங்களை அகற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி, 2 வாரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
அத்துடன் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அமைக்க இனி எந்த அமைப்புக்கும் அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும் என தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்படப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி இளந்திரையன், `கட்சிக்கொடிக் கம்பங்கள் நடுவதால் மோதல்கள் உருவாகி, சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு அதிக உயரங்களில் கட்சிக்கொடிக் கம்பங்கள் அமைப்பது ஏற்கத்தக்கது அல்ல. கட்சிக்கொடிக் கம்பங்களால் போக்குவரத்து இடையூறு, விபத்துகள் அதிகரித்து வருகின்றன’ என்றார்.