
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு,
`பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு, ரூ. 25 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்கவேண்டும். மாணவியின் அடையாளத்தை எஃப்.ஐ.ஆரில் குறிப்பிட்டது சட்டப்படி தவறு, பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்குக் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி படிப்பைத் தொடர அனைத்து உதவிகளையும் வழங்கவேண்டும். அவரிடம் இருந்து தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட எந்த ஒரு கட்டணத்தையும் வசூலிக்கக்கூடாது.
வழக்கு விசாரணை நடைபெறும்போதே அரசிடம் அனுமதி பெறாமல் செய்தியாளர்களை சந்தித்துள்ளார் சென்னை காவல் ஆணையர். அரசு அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளின்படி, காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்தப் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க, அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஜமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா என 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்கிறோம்
ஒரு குற்றம் நடைபெற்றால் அதில் பெண்தான் குற்றம் சாட்டப்படுகிறார்; ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நிலை உருவாகவேண்டும். பெண்களுக்கு இந்தச் சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்; பெண்கள் மீது குற்றம் சாட்டப்படுவது குற்றவாளிக்குச் சாதகமாகிவிடும்.
ஆண் என்பதற்காக, பெண்களைத் தொட உரிமை இல்லை; பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை இந்த சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும்’.