அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் அதை அவர் மீற முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள்காட்டி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (அக்.17) தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை புழல் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதியான வீரபாரதி என்பவர் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பான மனுவில், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருவதாகவும், நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக சிறைத்துறை டிஜிபி தலைமையிலான மாநில குழுவிடம் மனு அளித்ததாகவும் மேற்கோள்காட்டியிருந்தார் வீரபாரதி.
மேலும், இதைத் தொடர்ந்து தன் விடுதலை தொடர்பான கோப்பு முதல்வரின் பார்வைக்கு அனுப்பப்பட்டு அதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாகவும், அதன்பிறகு தமிழக ஆளுநரின் முடிவுக்கு அனுப்பப்பட்ட விடுதலை கோப்பை ஆளுநர் நிராகரித்ததாகவும் தன் மனுவில் குறிப்பிட்டார் வீரபாகு.
வீரபாரதி தொடர்ந்த வழக்கு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிவஞானம், எஸ்.எம். சுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது, ஏற்கனவே பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை சுட்டிக்காட்டினர் உயர் நீதிமன்ற நீதிபதிகள்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் அதை அவர் மீறமுடியாது எனக் குறிப்பிட்டு வீரபாரதியின் விடுதலை கோப்பு தொடர்பான ஆளுநரின் முடிவை ரத்து செய்வதாக அறிவித்தனர் நீதிபதிகள்.
மேலும், வீரபாரதியின் விடுதலை தொடர்பான கோப்பில் உரிய முடிவை ஆளுநர் எடுக்கவேண்டும் எனவும், அதுவரை வீரபாரதிக்கு ஜாமின் வழங்குவதாகவும் தீர்ப்பு வழங்கினர் நீதிபதிகள்.