ஆகஸ்ட் 31-ல் தொடங்கி இரண்டு நாட்களாக நடைபெற்ற சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவு பெற்றது. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், அணிகளுக்கும் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் இரண்டு நாட்களாக நடைபெற்ற சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நிறைவு பெற்றுள்ளது. இது தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடைபெற்ற இரவு நேர சாலை ஃபார்முலா 4 கார் பந்தயமாகும்.
இந்த ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தில், ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியைச் சேர்ந்த அலிபாய் முதலிடமும், அகமதாபாத் ரேசர்ஸ் அணியைச் சேர்ந்த திவி நந்தன் 2-வது இடமும், பெங்களூரு ஸ்டெஸ்டர்ஸ் அணியைச் சேர்ந்த ஜேடன் பாரியாட் 3-வது இடமும் பெற்றனர். இவர்களுக்கு விருதுகளை வழங்கிக் கௌரவித்தார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மேலும் கார் பந்தயம் நடைபெற்றபோது அதை பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து ரசித்துப் பார்த்தார் உதயநிதி ஸ்டாலின். இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு நடுவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 பெண்கள் அடங்கிய பைக் ரைடர்ஸ் அணியினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
`சென்னை நகரத்தின் மையப்பகுதியில் இப்படி ஒரு பந்தயம் நடக்கும் என்று 5 வருடங்களுக்கு முன்பு நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் இன்று அது சாத்தியமாகியுள்ளது. சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இதைப் போன்ற இரவு நேர சாலை பந்தயத்தைப் பார்க்கலாம்.
ஆனால் இதைச் சென்னையில் நடத்தியது மிகப்பெரிய சாதனை. இதற்காக தமிழக அரசுக்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் ஹைதராபாத் பிளாக்பேர்ட்ஸ் அணியின் உரிமையாளரும் நடிகருமான நாக சைதன்யா.
நிறைவு விழாவுற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், `இந்தப் போட்டிக்குப் பொதுமக்கள் சிறப்பான ஆதரவை அளித்தனர். இதற்கான ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து அரசுத் துறையினருக்கும் என் நன்றிகள். இந்த நிகழ்வு தமிழ்நாடு விளையாட்டுத்துறையின் சாதனை. அடுத்த வருடம் இதை மீண்டும் நடத்துவது குறித்து முதல்வரிடம் தகுந்த ஆலோசனை பெற்று முடிவெடுக்கப்படும்’ என்றார்.