சென்னை அண்ணாசாலை மன்றோ சிலை அருகே ஃபார்முலா 4 கார் பந்தயத்தைத் தொடங்கி வைத்தார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இது தெற்கு ஆசியாவில் முதல்முறையாக இரவு நேரத்தில் நடத்தப்படும் சாலை ஃபார்முலா 4 கார் பந்தயமாகும்.
தமிழக அரசு விளையாட்டுத்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்தப் பந்தயத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதில் இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீங் ஆகிய 2 பந்தயங்கள் நடைபெறுகின்றன.
இந்த ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கான எப்.ஐ.ஏ பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் பந்தயம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை அடுத்து, எப்.ஐ.ஏ சான்றிதழ் பெற கால அவகாசம் கேட்டு இன்று மாலை சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்.
இரவு 8 மணிக்குள் எப்.ஐ.ஏ சான்றிதழைப் பெற வேண்டும், இல்லாவிட்டால் பந்தயத்தை ஒத்திவைக்க வேண்டும் என உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். அதைத் தொடர்ந்து எப்.ஐ.ஏ.யின் பாதுகாப்பு சான்றிதழ் பெறப்பட்டு, 7 மணிக்கு பந்தய நிகழ்வைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
முதற்கட்டமாக பயிற்சிப் போட்டிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இரவு 10.45 மணி வரை பயிற்சி போட்டிகள் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.