நாய் கடித்த 5 வயது குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 5 வயது குழந்தையை 2 வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நாயின் உரிமையாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டார். மேலும், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரிடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய மருத்துவர், “அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, குழந்தைக்கு தலையில் மட்டுமல்லாமல் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆரம்பத்தில் நிலைமை மிகவும் கடினமாக இருந்தது, தற்போது குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. நாளை மறுநாள் குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படும்” என்றார்.
முன்னதாக, “நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும் அதற்கு இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்று மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசியிருந்தார்.