
சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 15-ல் இருந்து 20 ஆக உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் இதுவரை 200 வார்டுகளும், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டயார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளரசவாக்கம், ஆலந்தூர், அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்கள் இருந்தன.
2011-ல் சென்னையின் மக்கள்தொகை 66.72 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 85 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த மக்கள்தொகை உயர்வு 15 மண்டலங்களுக்கு இடையேயான சீரற்ற முறையில் இருந்தது. இதன் காரணமாக நிர்வாகரீதியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலைப் பட்டியல், வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளை அடிப்படையாக வைத்து மண்டலங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் அறிவித்தார் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அமைச்சர் கே.என். நேரு.
இந்நிலையில், மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம் ஆகிய ஐந்து மண்டலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.