கட்டட அனுமதிக் கட்டணம் உயர்வு குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம்

2500 சதுரஅடி வரை உள்ள மனையில் 3500 சதுரஅடிக்கு உள்ளாக கட்டப்படும் கட்டடங்களுக்கு, சென்னை மாநகராட்சி உடனடியாக ஒப்புதல் வழங்கி வருகிறது
கட்டட அனுமதிக் கட்டணம் உயர்வு குறித்து சென்னை மாநகராட்சி விளக்கம்
1 min read

கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியாகி வரும் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம்.

இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு:

`சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்ட அனுமதியும், கட்டட அனுமதியும் பெருநகர சென்னை மாநகராட்சியிடம் இருந்து பெறுவது கட்டாயமாகும்.

நடுத்தர மக்கள் பயன்பெறும் நோக்கில், சுய சான்றிதழ் அடிப்படையில் இணையவழியில் விண்ணப்பித்த உடனேயே, 2500 சதுரஅடி பரப்பளவு வரை உள்ள மனையில் 3500 சதுரஅடிக்கு உள்ளாக கட்டப்படும் கட்டடங்களுக்கு, வெளிப்படைத் தன்மையாக சென்னை மாநகராட்சி உடனடியாக ஒப்புதல் வழங்கி வருகிறது. இதன் படி ஒரு சதுர அடிக்கு 100 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுயசான்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டணத்துக்கும் (1 சதுர அடிக்கு ரூ. 99.70) வித்தியாசம் இல்லை. சில மாநகராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் சுயசான்றின் அடிப்படையில் அனுமதி தரும் கட்டணம் அதிகமாக இருந்ததைக் கருத்தில் கொண்டு இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

நடுத்தர மக்கள் சுயசான்றின் அடிப்படையில் எளிமையாக கட்டட அனுமதி பெறுவதை தடுக்கும் வகையில், கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in