
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக, பெருநகர சென்னை மாநகராட்சியில் வசிக்கும் பொதுமக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் வாட்ஸ்ஆப் வாயிலாக வழங்கிடும் நடைமுறையை இன்று (ஆக. 25) மேயர் பிரியா தொடங்கி வைத்தார்.
2025-26-ம் ஆண்டிற்கான சென்னை பெருநகர மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில், மக்களுக்கான சேவைகள் அனைத்தும் வாட்ஸ் ஆப் வழியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் பொதுமக்கள் சேவைகள் அனைத்தையும் வாட்ஸ் ஆப் வழியாக வழங்கப்படும் நடைமுறையை, ரிப்பன் மாளிகை அலுவலக கூட்டரங்கில் வைத்து மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்.
இந்த நடைமுறையின் கீழ் சேவைகளைப் பெற 9445061913 என்கிற எண்ணை பொதுமக்கள் தங்களின் கைபேசியில் முதலில் பதிவு செய்துகொள்ளவேண்டும்.
இதைத் தொடர்ந்து இந்த சாட்பாட்டில் (Chatbot) Vanakkam அல்லது வணக்கம் என்று பதிவிட வேண்டும். அதன்பிறகு திரையில் தோன்றும் விருப்பங்களை தேர்வு செய்து உரிய சேவைகளை பெறலாம்.
சொத்து வரி செலுத்துதல், தொழில் வரி செலுத்துதல் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், வர்த்தக உரிமம் செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல், கடை வாடகை செலுத்துதல், சமுதாயக் கூடம் முன்பதிவு, நீச்சல் குளம் முன்பதிவு, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பதிவு உள்ளிட்ட சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும் 32 வகையான சேவைகளை இந்த வசதி மூலமாகப் பெற முடியும்.
இந்த வாட்ஸ் ஆப் சாட்பாட்டை பலதரப்பட்ட மக்களும் பயன்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் இதில் பயன்படுத்தலாம்.