
இன்று (அக்.06) நடைபெற்ற சென்னை விமான சாகச நிகழ்ச்சி உலகத்திலேயே அதிக மக்கள் நேரில் பார்த்த ராணுவ நிகழ்ச்சி என்ற சாதனையைப் படைத்தது. மேலும் சுமார் 15 லட்சம் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு தினத்தை ஒட்டி இன்று சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காலை 11 மணிக்குத் தொடங்கி இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் தொடங்கி எம்.ஐ.ஜி., மிராஜ், தேஜஸ், ரஃபேல், சுக்கோய் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் வான் சாகசங்களில் ஈடுபட்டன.
இந்த நிகழ்ச்சியைக் காண மெரினாவில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 20-க்கும் மேற்பட்ட மக்கள் மயக்கமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
இந்த விமான சாகச நிகழ்ச்சியை சுமார் 15 லட்சம் பொதுமக்கள் நேரில் கண்டுகளித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அத்துடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியை நேரில் கண்டுகளித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக மெரினா கடற்கரையில் மட்டும் 6500 காவலர்கள் மற்றும் 1500 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 8000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.