
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் விமான சாகச நிகழ்ச்சி இன்று (அக்.06) காலை தொடங்கியது.
இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணி அளவில் தொடங்கியது.
முதலில் பாராசூட் உதவியுடன் வானில் பறந்துகொண்டிருந்த எம்.ஐ. 17 வி-5 ரக ஹெலிகாப்டர்களில் இருந்து குதித்து ஆகாச கங்கை குழு சாகசம் மேற்கொண்டது. இந்தக் குழுவின் 28 கருடா கமாண்டோக்கள் வானில் இருந்து குதித்து தீவிரவாதிகளிடம் இருந்து பிணையக் கைதிகளை மீட்பதுபோல சாகசம் மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ரஃபேல், ஜாக்குவார், சுக்கோய், தேஜாஸ், எஸ்.யூ. 30 உள்ளிட்ட 72 விமானங்களில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மெரினா கடற்கரையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான மக்கள் விமான சாகச நிகழ்ச்சியைக் காண குவிந்துள்ளனர். இந்த சாகச நிகழ்ச்சிக்காக சென்னை போக்குவரத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.