
நேற்று (அக்.31) கொண்டாடப்பட்ட தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
காற்றில் கலந்துள்ள மாசுவின் அடிப்படையில், காற்றின் தரம் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாசுவின் அடிப்படையில் காற்றை வகைப்படுத்தும் இத்தகைய முறையானது `காற்று தரக் குறியீடு’ (Air Quality Index) என அழைக்கப்படுகிறது.
இதன்படி, காற்றின் தரக் குறியீடு 50-க்கும் கீழ் இருந்தால் காற்றின் தரம் சிறப்பாக இருப்பதாகவும், 51 முதல் 100-க்குள் இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமாக இருப்பதாகவும் குறிப்பிடப்படும். மேலும், காற்றின் தரக் குறியீடு 101-க்கும் மேல் இருந்தால் சுமார் எனவும், 201-க்கும் மேல் இருந்தால் மோசம் எனவும், 300-க்கும் மேல் மிக மோசம் எனவும் குறிப்பிடப்படும்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று (அக்.31) தீபாவளிப் பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. அதிலும், தமிழக அரசு அறிவித்த நேரக்கட்டுப்பாட்டையும் மீறி பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைப் பண்டிகையைக் கொண்டாடினர்.
அதிகமான மக்கள் தொகை நெருக்கம், வாகனங்களின் பயன்பாடு, தொழிற்சாலைகள் போன்றவற்றால் சாதாரண நாட்களிலேயே தலைநகர் சென்னையில் காற்றின் தரம் குறைந்த நிலையில் இருக்கும். அத்துடன் நேற்று தீபாவளியை ஒட்டி பொதுமக்கள் வெடித்த பட்டாசுகளால் சென்னையில் காற்றின் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ள காரணத்தால், இன்று (நவ.1) காலை 11 மணி நிலவரப்படி, காற்றின் தரம் வெகுவாகக் குறைந்து, 125 (மோசம்) ஆக உள்ளது. சென்னை நகரத்தின் கொடுங்கையூர் (144), ஆலந்தூர் (142), நீலாங்கரை (137) ஆகியவை மோசமான காற்று மாசுவைக் கொண்ட முதல் மூன்று இடங்களாக உள்ளன.