
விரைவு ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும்போது, ரயில்வே சார்பில் அனுப்பப்படும் குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டு பயணிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
விரைவு ரயில்களில் முன்பதிவு காலம் 120 நாள்களிலிருந்து 60 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளன. இது கடந்த நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. மேலும், விரைவு ரயில்களின் தேவைக்கேற்ப, ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ரயிலில் முன்பதிவு செய்திருந்த பயணிகளின் இருக்கைகள் கணினி தொழில்நுட்பம் மூலம் தாமாக மாறக்கூடும் என்பதால், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன், ரயில் பெட்டி மற்றும் இருக்கை எண் இறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்திருந்தால், ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன் பயணிகளுக்கு ரயில்வே தரப்பில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இருக்கை மாற்றப்பட்டிருந்தால், குறுஞ்செய்தி மூலம் அது தெரியப்படுத்தப்படும்.
எனினும், குறுஞ்செய்தியில் இருக்கை மாற்றப்பட்டது குறித்து தகவல் அனுப்பியும், பயணிகள் சிலர் முன்பதிவு செய்தபோது இருந்த இருக்கை எண்ணில் பயணம் மேற்கொள்ள முனைவதாகப் புகார் வருவதாக தெற்கு ரயில்வே கருதுகிறது. எனவே, குறுஞ்செய்தியைப் பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள இருக்கை எண்ணில் பயணிகள் பயணிக்க வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள், PNR நிலையை அறிந்து உறுதி செய்த பிறகு பயணத்தைத் தொடங்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.