
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பரில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த விவகாரத்தில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்து, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை அண்ணாநகர் காவல் துணை ஆணையர் சிநேக பிரியா தலைமையிலான 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது.
இந்த விசாரணையின்போது, சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சொகுசு வீடுகளை குறிவைத்து காரில் சென்று கொள்ளையடித்தது தொடர்பாக வாக்குமூலம் அளித்திருந்தார் ஞானசேகரன். இதைத் தொடர்ந்து, அவரை மூன்று நாள் காவலில் எடுத்து, பள்ளிக்கரணை துணை ஆணையர் கார்த்திகேயன் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக ஞானசேகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது சிறப்பு புலனாய்வுக் குழு.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளது என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது, மேலும், விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஞானசேகரனின் கைபேசி உரையாடல்கள் போன்ற ஆதாரங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.