
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் அக்டோபர் 21 அன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகவே தமிழ்நாட்டில் கடந்த இரு நாள்களாக மழை தீவிரமாகப் பெய்தது. இது வடதமிழகக் கடலோரப் பகுதிகளை ஒட்டி வருவதால் அக்டோபர் 21 முதல் அக்டோபர் 22 காலை வரை மழை தீவிரமாகப் பெய்யும் எனக் கணிக்கப்பட்டது. இதன் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இது புயலாக வலுப்பெறுமா என்பதை இன்று (அக்டோபர் 22) தான் சொல்ல முடியும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இது புயலாகவும் வலுப்பெறப்போவதில்லை. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மூலம் கிடைக்கும் மழையின் தீவிரம் இனி படிப்படியாகக் குறையும் என்பது தெரிகிறது.
அடுத்ததாக அக்டோபர் 25 அல்லது அக்டோபர் 26-ல் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்தடுத்த நாள்களில் மட்டுமே இதுபற்றி உறுதியாக எதுவும் கூற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டையில் இன்று அதி கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதுதவிர சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி படுகை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு எவ்வித மழை எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
Rain Alert | Chennai RMC | Bay of Bengal | Weather Report | Weather Update |