
சென்னையில் இன்று (மார்ச் 25) காலை பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டுவிட்டு, விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற உ.பி.யைச் சேர்ந்த கொள்ளையர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இரு மர்ம நபர்கள் சென்னையின் அடையாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை, கிண்டி, கோட்டூர்புரம், சாஸ்திரி நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்தமாக 8 இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல, கடந்த பொங்கல் அன்று தாம்பரத்தை ஒட்டிய பல்வேறு இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இதனால் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த தனிப்படை காவல்துறையினர், சைதாப்பேட்டையில் இருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சியில் இருந்து கிடைத்த கொள்ளையர்களின் உருவப்படங்களை சென்ட்ரல் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கொள்ளையில் ஈடுபட்ட இருவரும் விமானம் மூலம் தப்பிச் செல்வதாக தனிப்படை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் வைத்து இரு கொள்ளையர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் உ.பி. மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல்துறை விசாரித்து வருவதாகவும், இதில் சம்மந்தப்பட்டுள்ள வேறு நபர்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட விவரங்களை அவர்களிடம் கேட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.