மீனவர் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வு காணவேண்டும்: ஆளுநர் ஆர்.என். ரவி

இந்தப் பிரச்னையை அரசியலாக்குவதற்கு பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்கு பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையில் மாநில அரசு ஈடுபடவேண்டும்.
மீனவர் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வு காணவேண்டும்: ஆளுநர் ஆர்.என். ரவி
1 min read

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி.

மனோலயா மனநல காப்பக கட்டடத்தை திறந்து வைப்பதற்காக இன்று (மார்ச் 2) ராமேஸ்வரத்திற்கு வருகை தந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி. அப்போது, மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் 3-வது நாளாக நடைபெற்ற மீனவர்களின் போராட்ட பந்தலுக்கு அவர் சென்றார்.

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மீனவர்கள் பிரதிநிதிகள் அவரிடம் வழங்கினார்கள். இதைத் தொடர்ந்து, தன் எக்ஸ் தளப் பதிவில் ஆளுநர் ரவி கூறியதாவது,

`இன்று நான் ராமேஸ்வரத்திற்கு சென்றிருந்தபோது, துன்பத்தில் உழலும் நமது மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளை சந்தித்தேன். அவர்களின் நிலை மீது நான் ஆழ்ந்த இரக்கம் கொள்கிறேன். நமது வறிய மீனவர்களின் வாழ்வாதார கவலைகளுக்குக் காரணமான 1974-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அநியாயமான ஒப்பந்தத்தால், அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

கச்சத்தீவுவை சுற்றியுள்ள கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்து அன்றைக்கு மத்தியிலும், தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன. அன்றிலிருந்து இன்று வரை நமது மீனவ சமூகம் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வருகிறது.

இலங்கை அரசால் அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்.

இந்தப் பிரச்னையை அரசியலாக்குவதற்கு பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்கு பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையில் மாநில அரசு ஈடுபட்டால், அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு மேலும் உதவும். அனைத்திற்கும் மேலாக, 1974-ல் நடந்த தவறுக்கான சம பொறுப்பு அன்றைய மத்திய கூட்டணியில் இருந்த இன்றைய தமிழக ஆளும் கட்சிக்கு உள்ளது’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in