தேசிய கல்விக் கொள்கையின் பிரிவுகளை நடைமுறைப்படுத்தாததால், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்குச் சேர வேண்டிய முதல் தவணை நிதி ரூ. 573 கோடி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் திட்ட ஒப்புதல் வாரியம், 2024-2025 நிதியாண்டுக்கான அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ. 3,586 கோடி நிதியை ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியை 4 தவணைகளில் தமிழக அரசுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டது.
அதன்படி, முதல் தவணை நிதியான ரூ. 573 கோடி, கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மத்திய அரசிடம் இருந்து இந்த நிதி விடுவிக்கப்படவில்லை. முதல் தவணை நிதியை விடுவிக்குமாறு தமிழக அரசு அனுப்பிய தொடர் கடிதங்களுக்கும், நினைவூட்டல்களுக்கும் மத்திய அரசிடம் இருந்து முறையான விளக்கம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மத்திய அரசின் பிரதம மந்திரி ஸ்ரீ திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மும்மொழிக்கொள்கை பள்ளிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறது தமிழக அரசு.
அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதி தமிழகத்துக்கு கிடைக்காததால் சுமார் 15,000 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் எழும் நிலை உருவாகியுள்ளது. மேலும் இதனால் ஆசிரியர் பயிற்சி, ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்புகள் வரை பயிலும் மாணவிகளுக்கான தற்காப்புப் பயிற்சி போன்றவை தடைபட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.