
கடந்த ஜூலை 23-ல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டைச் சார்ந்த இரயில்வே பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு இரயில்வே திட்டங்களுக்கு இடைக்கால மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதி தற்போது மத்திய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார் மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்.
இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ள அறிக்கையில்,
`இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், மத்திய பட்ஜெட்டை ஒட்டி தற்போது வெளியிடப்பட்டுள்ள பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ. 301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ரூ 2,214 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 1,928 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை வழித்தடம், அத்திப்பட்டு-புத்தூர் வழித்தடம், ஈரோடு-பழனி வழித்தடம், சென்னை-மகாபலிபுரம்-கடலூர் கடற்கரை பாதை, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக்கோட்டை-ஆவடி லைன், சேலம்-கரூர்-திண்டுக்கல் இரட்டை பாதை, ஈரோடு-கரூர் இரட்டை பாதை ஆகிய திட்டங்களுக்கு இடைக்கால பட்ஜெட்டில் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் தற்போது இவை அனைத்துக்கும் தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதி பறிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் வெளியிடப்பட வேண்டிய இரயில்வே பிங்க் புத்தகத்தை வெளியிடாமலே மத்திய அரசு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்தது. இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலுக்காக இவர்கள் செய்த போலி அறிவிப்புகள் நாட்டுமக்களுக்கு தெரிந்துவிடும் என்பதால் இவர்கள் பிங்க் புத்தகத்தையே வெளியிடாமல் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதத்தை நடத்தி முடித்தனர்.
பொது பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இப்பொழுது தமிழ்நாட்டின் புதிய ரயில் வழித்தடங்கள் அனைத்துக்கும் இழைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதிக்கு எதிரான எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்’.