சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

10.5 % இட ஒதுக்கீடு வழங்கியதற்கு போதிய தரவுகள் இல்லாததால் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளன
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
1 min read

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி தமிழக சட்டபேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், `சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். இது குறித்து இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் கொண்டுவரப்படும். அதற்கு ஜி.கே.மணி ஆதரவு தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

இதைத் தொடர்ந்து, `வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடு நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. அதை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார் ஜி.கே.மணி

`இந்த (வன்னியர்களுக்கான) 10.5 % இட ஒதுக்கீடு வழங்கியதற்குப் போதிய தரவுகள் இல்லாததால், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் இந்த உள் இட ஒதுக்கீட்டை நிறுத்தி வைத்துள்ளது. எனவே இது சார்ந்த தரவுகளைப் பெற ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாதிவாரி கணக்கெடுப்புடன், மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் எடுத்தால் இட ஒதுக்கீடு அமல்படுத்த ஏதுவாக இருக்கும்’ என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஜி.கே.மணிக்கு பதிலளித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான அரசின் பதில் திருப்தி அளிக்காததால் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தது பாமக. அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி.

`சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பிறகே இட ஒதுக்கீடு என்று சொல்கிறார்கள். ஆனால் அது தனி பிரச்சனை, உள் இட ஒதுக்கீடு தனி பிரச்சனை. (வன்னியர்களுக்கான) உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அமைச்சர்களின் பதில் இந்த விவகாரத்தைத் திசை திருப்புவதாக உள்ளது. அவர்கள் அரசியல் பேசுகின்றனர். மாநில அரசு இதைச் செய்ய முடியாது, மத்திய அரசைக் கேளுங்கள் என்கின்றனர். இது எந்த வகையில் நியாயம். அமைச்சர்கள் பேசுவதற்கு முன்பு உண்மையைச் சொல்ல சபாநாயகர் அனுமதிக்கவில்லை’ எனக் குற்றம்சாட்டினார் ஜி.கே.மணி.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in