
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை எனவும், இதனால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் பேசியுள்ளார் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு.
விருதுநகரில் இன்று (ஜன.19) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியவை,
`எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜன.18) சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசும்போது, தமிழ்நாட்டின் நிதி நிலைமை குறித்துத் தவறான தகவலைக் கூறியுள்ளார். தமிழ்நாடு திவாலாகப் போகிறதைப் போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்னாள் முதல்வராக ஒருவர் முன்வைத்திருப்பது வேடிக்கையானது.
அவர்களது 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் குறைவாகக் கடன் வாங்கியதாகவும், எங்களின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அதிகமாகக் கடன் வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ஏற்கனவே சட்டப்பேரவையில் நான் விரிவான விளக்கத்தை அளித்திருக்கிறேன். இருப்பினும் மக்கள் மன்றத்தில் அவர் தவறானக் கருத்தைப் பதிய வைக்க முயற்சி செய்கிறார்.
மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ. 26 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசே ஒதுக்கியது. பிரதமர் வீடு வழங்கும் திட்டத்துக்குத் தமிழக அரசே கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததாலேயே தமிழக அரசுக்குக் கடன் சுமை அதிகரித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தின் நிதி நிலைமை கட்டுக்குள் உள்ளது.
பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு (ஜனவரி மாத) ஜிஎஸ்டி நிதிப்பகிர்வில் ஒட்டுமொத்தமாக 40 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 15 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தென்மாநிலங்களுக்கும் ரூ. 27,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்திற்கு ரூ. 31,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில பொருளாதார வளர்ச்சிக்குப் பரந்தூர் விமான நிலையம் அவசியமான ஒன்று. பிற மாநில தலைநகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை விட சென்னை விமான நிலையம் பரப்பளவில் சிறியதாகவே உள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்களை எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் நேரில் சந்திக்கலாம்’ என்றார்.