
பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்திற்கான திட்ட அனுமதிகோரி தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னையின் புதிய விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விமான நிலையத்தை அங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இட அனுமதியை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமும், சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகமும் ஏற்கனவே வழங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கான திட்ட அனுமதிகோரி தமிழக அரசு சார்பில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதல் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, புதிய விமான நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டிட்கோ விரைவில் தொடங்கவுள்ளது.
பரந்தூர் விமான நிலைய கட்டுமானப் பணிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கி, 2028-ல் விமான நிலையத்தை முழுவதுமாகக் கட்டி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.