
ஃபெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டத்தில் இன்று (டிச.8) காலை மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவ.30-ல் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு வடமாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களும் சேதமடைந்தன.
இதனைத் தொடர்ந்து வெள்ள சேதத்தைப் பார்வையிட மத்திய குழுவை அனுப்பிடுமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர். இதனை அடுத்து தமிழகம், புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் சேதங்களை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்தது.
இந்நிலையில், கடந்த டிச.6-ல் மத்திய குழுவினர் சென்னைக்கு வருகை தந்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையின்போது புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக, நிரந்தர மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ. 6,675 கோடி நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை மனு வழங்கினார்.
அதன்பிறகு நேற்று (டிச.7) விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை, மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். குறிப்பாக இருவேல்பட்டு, அரசூர், திருவெண்ணைநல்லூர், கூரானூர், சிறுமதுரை, வயலாமூர், சென்னகுணம், ஆயந்தூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வுசெய்து, மழை வெள்ளத்தால் நீரில் முழ்கிய நெல் வயல்களை பார்வையிட்டனர்.
இந்நிலையில், இன்று காலை கடலூர் மாவட்டத்தின் பண்ருட்டிக்கு அருகே உள்ள பகண்டை, மேல்பட்டாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது, கடலூரைச் சேர்ந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் மத்திய குழுவினரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்
கடலூரில் ஆய்வு முடிந்ததும் புதுச்சேரிக்கு செல்லும் மத்தியக் குழு இன்றும், நாளையும் அங்கு ஆய்வு மேற்கொள்கின்றனர். நாளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதனையும், முதல்வர் ரங்கசாமியையும் அவர்கள் சந்தித்துப் பேசுகின்றனர்.