
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது, தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் அது கவனமாக இருக்கிறது என செய்தியாளர் சந்திப்பில் இன்று (நவ.27) பேசியுள்ளார் திருமாவளவன்.
முன்னாள் பிரதமர் வி.பி. சிங் பிறந்தநாளை ஒட்டி சென்னை மாநிலக் கல்லூரியில் அமைந்துள்ள அவரது திருவருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார் விசிக தலைவர் திருமாவளவன். இதைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியவை பின்வருமாறு,
`ஆட்சியை கவிழ்ப்பார்கள் என்பது தெரிந்தும் அதைப் பற்றி கவலைப்படாமல் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை நிலை நாட்டிய பெருமை வி.பி. சிங்கை சாரும். அவருக்கு விசிக சார்பில் வீரவணக்கத்தை செலுத்துகிறோம். அவர் பாதுகாத்த சமூக நீதிக்கு இன்று பலமுனைகளில் இருந்தும் பேராபத்து சூழ்ந்துள்ளது.
சங்பரிவார்களின் அந்த சதியை முறியடித்து சமூக நீதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் உள்ளது. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். சனாதன சக்திகளை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைவு இன்றியமையாதது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அணுகுகிறது. முக்கியமாக, தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் கவனமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வை காயப்படுத்துவதிலும் குறியாக இருக்கிறது. அந்த வரிசையில் தஞ்சை மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என்பது நம் கோரிக்கை.
அப்படித்தான் கடந்த அதிமுக ஆட்சியின்போது கூறப்பட்டது. ஆனால் இன்று அதை மத்திய அரசு மறுத்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். அதிமுகவும் இதற்கான விளக்கத்தை அளிக்கவேண்டும்.
அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியமான அடிப்படைக் கூறுகளில் ஒன்று பன்மைத்துவம். அதனால்தான் பல கட்சிகள் இங்கே அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. பல மொழி பேசும் தேசிய இனங்களும் இங்கே சுதந்திரமாக வாழ முடிகிறது. ஆனால் அதை முற்றாக சிதைக்கிற ஒரு அரசியல் முயற்சியே ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற பாஜகவின் நிலைப்பாடு. அது ஏற்புடையது அல்ல’ என்றார்.