நீலகிரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமிராக்களில் நேற்று மாலை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவினாசி மற்றும் பவானிசாகர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது நீலகிரி மக்களவைத் தொகுதி. இந்தத் தொகுதிகளுக்குள்பட்ட வாக்கு இயந்திரங்கள், உதகை பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிசிடிவி கேமிராக்கள் மூலம் பாதுகாப்பு அறையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாலையன்று சிசிடிவி கேமிராக்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரைத் தொடர்பு கொண்டுள்ளார்கள்.
நீலகிரி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் எம். அருணா, தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருடன் பாதுகாப்பு அறைக்குச் சென்றார். சிசிடிவி கேமிராக்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக சரிசெய்யப்பட்டது. இதனால், 20 நிமிடங்களுக்கான காட்சிகள் மட்டுமே சிசிடிவி கேமிராக்களில் பதிவாகவில்லை என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.