

கரூர் நெரிசல் வழக்கில் மீண்டும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் திடீரெனக் நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் சிக்கி உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்து ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அதன்பின் சம்பந்தப்பட்டவகளைத் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
நேரில் ஆஜரான விஜய்
விசாரணையின் ஒரு பகுதியாக தவெக தலைவர் விஜய்க்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய நாள்களில் தில்லியில் உள்ள சிபிஐ அலுவகத்தில் விஜய் ஆஜரானார். அப்போது விஜயிடம் சிபிஐ அதிகாரிகள் அடுக்கடுக்காக பல கேள்விகளைக் கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்? எப்போது பேச்சை முடித்தீர்கள்? எப்போது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றீர்கள்? அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான கூட்டம் வந்தது எப்படி? அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததை நிர்வாகிகள் கவனிக்கவில்லையா? தண்ணீர் பாட்டிலை வீசியபோது கூட்ட நெரிசலை நீங்கள் பார்க்கவில்லையா? வாகனத்தில் ஏறி நின்றபோது கீழே நடந்தது தெரியவில்லையா? கண் எதிரே ஏற்பட்ட கூட்ட நெரிசலை நீங்கள் பார்க்கவில்லையா? அவ்வளவு நெரிசலிலும் வாகனத்தை முன்னே செலுத்தியது ஏன் என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விஜயிடம் விசாரணை நிறைவு
இதற்கிடையில், விஜயிடம் விசாரணை நிறைவடைந்தது. அதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “விஜயிடம் இரண்டாவது நாளாக விசாரிக்கச் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் அவர் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளித்துள்ளார். எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட வரை இன்றுடன் விஜயிடம் விசாரணை நிறைவடைந்தது. இனி அவருக்கு எந்த சம்மனும் அனுப்பப்படாது என்று சொல்லியுள்ளார்கள்” என்று கூறியிருந்தார்.
விஜய்க்கு சம்மன்
இந்நிலையில் வரும் மார்ச் 10 அன்று தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் மார்ச் 10 அன்று ஆஜராவதிலிருந்து விஜய் தரப்பு விலக்கு கோரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும்,, சென்னையில் உள்ள சிபிஐ அலுவலத்தில் ஆஜர் ஆவதற்கும் விஜய் தரப்பு அனுமதி கேட்டுள்ளதாக தெரிய வருகிறது.
CBI has summoned TVK Chief Vijay to appear for questioning on Karur stampede Issue.