

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு வந்து ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அதன்பின் சம்பந்தப்பட்டவகளைத் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
விஜயிடம் சிபிஐ விசாரணை
விசாரணையின் ஒரு பகுதியாக தவெக தலைவர் விஜய்க்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி 12 மற்றும் 19 ஆகிய நாள்களில் தில்லியில் உள்ள சிபிஐ அலுவகத்தில் விஜய் ஆஜரானார். அப்போது அவரிடம், “கூட்ட நெரிசல் ஏற்பட்ட பிறகும் தொடர்ந்து பிரசாரம் செய்தது ஏன்? அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான கூட்டம் வந்தது எப்படி? வாகனத்தில் ஏறி நின்றபோது கீழே நடந்தது தெரியவில்லையா?” என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விஜய்க்கு மீண்டும் சம்மன்
ஜனவரி 19 அன்று விஜயிடம் விசாரணை நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார், “விஜயிடம் விசாரணைகள் முடிவடைந்துவிட்டன. இனிமேல் அவருக்கு சம்மன் அனுப்பப்படாது என்று அதிகாரிகள் கூறியுள்ளார்கள்” என்று தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று (மார்ச் 09) மீண்டும் விஜய் நேரில் ஆஜராக கோரி சிபிஐ சம்மன் அனுப்பியது.
கால அவகாசம் கோரிய விஜய்
இதையடுத்து, இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமையகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் விசாரணைக்கு ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து 15 நாள்கள் விஜய் தரப்பு கால அவகாசம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவும் அனுமதி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
செந்தில்பாலாஜிக்கு சம்மன்
இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. வரும் மார்ச் 17 அன்று நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள செந்தில்பாலாஜி கூறியிருப்பதாவது:-
“கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Former minister Senthil Balaji has been summoned to appear at the CBI office in Delhi and give an explanation regarding the Karur stampede incident.