சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் கீழ் பதிந்த வழக்கில் தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேலிடம் நேற்று (ஆகஸ்ட் 10) விசாரணை மேற்கொண்டது சிபிஐ.
திருநெல்வேலி பழவூர் கோவிலில் 2005-ல் திருடுபோன 13 ஐம்பொன் சிலைகளில், 6 சிலைகள் விருதுநகர் ஆலம்பட்டியில் 2008-ல் மீட்கப்பட்டன. இது தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொண்டார் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல்.
பிறகு இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட காவல் அதிகாரியான துணை கண்காணிப்பாளர் காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தன்னை பழிவாங்கும் நோக்கில் பொன். மாணிக்கவேல் செயல்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் காதர் பாட்ஷா.
காதர் பாட்ஷா தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம். இதை அடுத்து 2022-ல் 13 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டது சிபிஐ. இந்நிலையில் நேற்று சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன். மாணிக்கவேல் இல்லத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர் சிபிஐ அதிகாரிகள்.
சிபிஐ விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பொன். மாணிக்கவேல், `வழக்கு தொடர்பாக என்னிடம் இருந்த முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் கொடுத்து உதவியிருக்கிறேன். 2011-ல் சிலை கடத்தல் வழக்கு அதிகாரியாக நான் பொறுப்பேற்றேன். அதுவரை எந்த ஒரு குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. நான்தான் ஒவ்வொருவராக கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறேன்
தற்போது குற்றவாளிகள் அனைவரும் ஒன்று சேருகிறார்கள். மீண்டும் சிலை கடத்தல் வியாபாரத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். எனவே எனக்கு தொந்தரவு கொடுக்க நினைக்கிறார்கள். நான் அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். நான் யாரையும் விடப்போவதில்லை’ என்றார்.