

ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஆஷா உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிராக தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ஜனநாயகன். இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்க்கு இது கடைசிப்படம் என்றும் கூறப்படுகிறது.
தணிக்கை சான்றிதழில் சிக்கல்
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுத் தேதியை நெருங்கிவிட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் தாமதம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது. இது அவசர வழக்காக நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய நாள்களில் விசாரிக்கப்பட்டது.
தணிக்கை வாரியம் வாதம்
அப்போது, தணிக்கை வாரியத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்கிறது. பாதுகாப்புப் படையில் இலச்சினை அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறோம். இதனால்தான் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறோம். இது தொடர்பாக ஜனவரி 5 அன்றே தகவல் தெரிவித்துவிட்டோம். மறுதணிக்கைக்கு அமைக்கப்பட்ட குழுவின் புதிய உறுப்பினர்களும் படத்தைப் பார்க்க வேண்டும். அதற்கு 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
இதையடுத்து தீர்ப்பு ஜனவரி 9 அன்று வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். அதன்படி இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி ஆஷா வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- “ ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும். மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையை ரத்து செய்யப்படுகிறது. ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகார் ஆபத்தானது. இதுபோன்ற போக்கை ஊக்கப்படுத்த முடியாது”
உடனடி மேல்முறையீடு
இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சாலிசிட்டர் ஜென்ரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்ஸவவிடம் அனுமதி கோரினார். அப்போது உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யுங்கள், வழக்கைப் பிற்பகலில் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்து மேல்முறையீட்டுக்கு அனுமதி வழங்கினார்.
The CBFC immediately appealed against the order issued by a single judge of the Madras High Court, Justice P. T. Asha, directing the grant of a U/A certificate to the film Jana Nayagan.