
மத்திய அரசு நடத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்கவேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
வரும் மார்ச் 1, 2027 அன்று நாடு தழுவிய மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,
`சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது, இந்தியா முழுவதும் வலுவடைந்த காரணத்தால் மத்திய பாஜக அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் மத்திய அரசு, மக்கள்தொகை கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு சாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக்கூடாது; அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்தவேண்டும்.
இதற்கென்று அனைத்து சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்யேக ஆணையம் அல்லது குழு அமைக்கவேண்டும்.
உரிய தரவுகள் முறையாகவும் முழுமையாகவும் இருக்கும் வகையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள்தொகை கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் எங்கள் பிரதான கோரிக்கையான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்தவேண்டும்.
குறிப்பாக, மக்களவை தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக்கூடாது. மாறாக அனைத்து சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்கவேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Census) நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்தவேண்டும். அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன.
இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்தப் புதிய சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வில் (Caste Survey), மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்தத் தரவுகள் முழுமையாகச் சேகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.
இதுதான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்றும் அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசு செய்ய வேண்டியது இதைத்தான்.
எனவே, தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்தவேண்டும். அந்த ஆய்வானது, அனைத்துச் சமூகத்திற்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பா.ஜ.க.வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக்கூடாது’ என்றார்.