தெருக்கள், சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை! | Tamil Nadu Government|

புதிய பெயர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் சில பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி...
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை! | Tamil Nadu Government|
2 min read

குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உட்கட்டமைப்புகளில் சாதிப் பெயர்களை நீக்குதல் அல்லது மறுபெயரிடுவது தொடர்பாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

உள்ளாட்சி அமைப்புகளின் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற சொத்துகள் மற்றும் நீர்நிலைகள் போன்ற பொது உட்கட்டமைப்புகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது பிரிவைச் சார்ந்த மக்களையும் அவர்களது உணர்வுகளையும் இழிவுபடுத்துவதாக அல்லது பாகுபாடு காட்டும் வகையில் அமைந்துள்ளதா என்பதையும் குறித்து மதிப்பிடும் வகையில் பெயர்கள் தொடர்பாக விரிவான பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், "அத்தகைய குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பொதுவான சொத்துகள் ஆகியவற்றைப் பட்டியலிட்ட பிறகு, அத்தகைய பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடையே நிலவும் சூழ்நிலையை, குறிப்பாக உள்ளூர் மக்களின் கருத்து/பதில்களைப் பொறுத்து மதிப்பிட வேண்டும். களத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால், பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவை ஒரு பிரிவினரை இழிவுபடுத்தும் விதமாகவும், உள்ளூர் மக்களும் மாற்றத்தைக் கோரினால், அந்தப் பெயர்கள் பொதுவான பெயர்களாக மாற்றப்பட வேண்டும்" என்று அரசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில பெயர்கள்/பிரிவுகள் அவசியம் மாற்றப்பட வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "எடுத்துக்காட்டாக ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம், பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்றவை தவிர்க்கப்பட வேண்டிய பெயர்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பொது/சாதிச் சார்பற்ற தன்மை கொண்ட புதிய பெயருடன் பெயரை மாற்றலாம். பொதுமக்கள் ஏற்கெனவே உள்ள பெயர்களை மாற்ற விரும்பவில்லை எனில், அத்தகைய பெயர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. பிரச்னையின் உணர்திறனைக் கருத்தில் கொண்டு, மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பெயர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் சில பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ போன்ற பெயர்களைச் சூட்டலாம் எனப் பரிந்துரைத்துள்ளது. தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளுவர், ஔவையார், கபிலர், சீத்தலைச் சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர் போன்ற பெயர்களை மாற்றுப் பெயர்களுக்குப் பரிந்துரைத்துள்ளது தமிழ்நாடு அரசு.

Tamil Nadu Government | GO | Government Order |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in