சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு கண்துடைப்பு நடவடிக்கை: திருமாவளவன்

பீஹாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பு முதன்மையான பேசுபொருளாக மாறியிருக்கிறது.
திருமாவளவன் - கோப்புப்படம்
திருமாவளவன் - கோப்புப்படம்ANI
1 min read

மக்கள்தொகை கணக்கெடுப்பு தற்போது நடைபெறாத நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு கண்துடைப்பு நடவடிக்கை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (ஏப்.30) ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று (மே 1) செய்தியாளர்களைச் சந்தித்து திருமாவளவன் பேசியதாவது,

`மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பது அறிவிக்கப்படவில்லை.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு 2029-ல் பதவிக்காலத்தை நிறைவு செய்கிறது. ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2031-ல்தான் நடைபெறும் என்ற நிலையில் இருக்கிறது. 2021-ல் நடந்திருக்கவேண்டும் ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது தள்ளிப்போனது. 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்றால் 2031-ல் அந்த காலக்கெடு வருகிறது.

2031-ல் பாஜக ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. 2029 பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் அது உறுதியாகும். இந்த நிலையில் இப்போதே இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது கண்துடைப்பாகவே தெரிகிறது. பீஹாரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் சாதிவாரி கணக்கெடுப்பு முதன்மையான பேசுபொருளாக மாறியிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாதிவாரிக் கணக்கெடுப்பை முன்னிறுத்தி தொடர்ச்சியாகப் பேசி வருகிறார். இண்டியா கூட்டணியின் எதிர்க்கட்சிகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை அமைச்சரவையின் மூலம் பாஜக அறிவித்துள்ளது’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in