
சனாதனம் குறித்துப் பேசியதற்கு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் நேரில் ஆஜராவதிலிருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இதில், மலேரியா மற்றும் டெங்கு நோய்களைப்போல சனாதன தர்மத்தையும் ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையானது. நாடு முழுவதிலுமிருந்து இதற்கு எதிர்ப்புகள் வலுவாகக் கிளம்பின. பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டன.
தனது கருத்து குறித்து உத்தரப் பிரதேசம், கர்நாடகம், பிஹார், மகாராஷ்டிரம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் எனப் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றிணைப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் மனு மீது பதிலளிக்கக்கோரி எதிர் தரப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்த வழக்குகளைத் தமிழ்நாட்டுக்கு மாற்ற முடியாது. நீங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே செல்ல வேண்டும். உங்களுக்கு வசதியான மாநிலம் எதுவென்று கூறுங்கள்" என்று கூறியது.