மதுரை ஆதினம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
மதுரை ஆதீனம் - கோப்புப்படம்
மதுரை ஆதீனம் - கோப்புப்படம்ANI
1 min read

உளுந்தூர்பேட்டை கார் விபத்தை முன்வைத்து கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை அதீனத்தின் மீது சென்னையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு அருகே உள்ள காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற 6-வது சைவ சிந்தாந்த மாநாட்டில் பங்கேற்க, கடந்த மே 2 அன்று மதுரையில் இருந்து காரில் மதுரை ஆதீனம் கிளம்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஆதினம் இருந்த காரின் மீது மற்றொரு கார் மோதியது. இந்த சம்பவத்தை முன்வைத்து, இஸ்லாம் மத அடையாளத்தில் இருந்த இருவர் காரை மோதவிட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாக மதுரை ஆதீனம் வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவிகளில் பதிவான காட்சிகளை உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதன்பிறகு காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

`மதுரை ஆதீனத்தின் வாகனம் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்வதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக ரவுண்டானா அருகே சென்றபோது, சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக சென்ற மற்றொரு காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மதுரை ஆதினம் பயணித்த காரின் பின்புறத்தில் சிறிய அளவில் சேதாரமும், மற்றொரு காரின் முன்புறத்தில் சிறிய அளவிலான சேதமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இரு தரப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிறகு அவர்களாகவே காலை சுமார் 10 மணியளவில் அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை. சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனம் பயணம் செய்த வாகனம் அதிவேகமாக சென்று இவ்விபத்தினை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன்பிறகு, மதுரை ஆதீனத்தின் காருடன் விபத்துக்குள்ளான மற்றொரு காரின் ஓட்டுநர் முபாரக் அலி, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் மே 5 அன்று வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து மதுரை ஆதீனத்தின் மீது வழக்கறிஞர் ராஜேந்திரன் அளித்த புகாரை அடுத்து,

கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்தில் பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தீமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மதுரை ஆதீனம் மீது சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in