சண்டாளன் என்ற சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாகப் பயன்படுத்தியதற்காக சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியை விமர்சனம் செய்யும் வகையில், ஒரு பாடலைப் பாடினார்.
இந்தப் பாடலில் சண்டாளன் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. இதை அடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, பிறகு நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சாட்டை துரைமுருகன் கைதுக்குக் கண்டனத்தைத் தெரிவித்த சீமான், சண்டாளன் என்ற வார்த்தை வரும் அதே பாடலைப் பாடி, முடிந்தால் தன்னைக் கைது செய்யுமாறு கூறினார். இதை அடுத்து அஜேஷ் என்பவர் சண்டாளன் என்ற சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாகச் சீமான் பயன்படுத்தியதற்காகக் கூறி தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதை அடுத்து சீமான் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம். இந்த உத்தரவைத் தொடர்ந்து சீமான் மீது சென்னை பட்டாபிராம் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.