திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

“மரியாதையாகப் பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய விடுவேன்".
திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் பறக்கும் படையினரை மிரட்டிய காரணத்துக்காக திருப்பூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே ஈரோடு - திருப்பூர் மாவட்ட எல்லையில், பறக்கும்படை அதிகாரிகள் இன்று வழக்கம் போல் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த பாஜக வேட்பாளர் முருகானந்தத்தின் காரை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது முருகானந்தம் காரை ஓரமாக நிறுத்தாமல் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்திவிட்டு வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம், “மரியாதையாகப் பேசி பழகுங்கள், உங்கள் அனைவரையும் வாழ்நாள் முழுவதும் கோர்ட்டுக்கு அலைய விடுவேன். என்ன மிரட்டுகிறீர்களா? எங்களை மிரட்டுமாறு உங்களிடம் யாராவது சொன்னார்களா?” என பேசியுள்ளார்.

மேலும், தேர்தல் அதிகாரி ஒருவரிடம் அடையாள அட்டையைக் காட்டுமாறு மிரட்டும் வகையில் பேசினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கூறியதைத் தொடர்ந்து, வேகமாக சோதனை செய்யுமாறு முருகானந்தம் அறிவுறுத்தினார்.

இதன் பிறகு இச்சம்பவம் தொடர்பாக பறக்கும் படை அதிகாரிகள் தரப்பில் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in