விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்துகள் ஏற்புடையது அல்ல என்று பேசியுள்ளார் திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும், மக்களவை எம்.பி.யுமான ஆ. ராசா.
`வட மாவட்டங்களில் விசிக ஆதரவு இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது. நேற்று சினிமாவிலிருந்து வந்தவர்கள் துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட எங்கள் தலைவர் திருமாவளவன் ஏன் துணை முதல்வர் ஆகக்கூடாது’ என்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா.
ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து தொடர்பாக இன்று (செப்.23) செய்தியாளர்களுக்கு ஆ. ராசா அளித்த பேட்டி பின்வருமாறு:
`விசிக தலைவர் திருமா அவர்களை அந்த மாவட்டத்துக்காரன் என்ற முறையில் நாற்பதாண்டு காலமாக நான் அறிவேன். அவரது இடதுசாரி சிந்தனை இந்தியா முழுவதும் எதிரொலிப்பதில் நானும், எங்கள் முதல்வரும் பெருமை கொள்கிறோம்.
மதவாதத்தை ஒழிப்பதிலும், சமூக நீதியை காப்பதிலும் திமுகவுடன் தோள்கொடுக்கிறது விசிக. இந்த சூழலில் அந்தக் கட்சியில் புதிதாக சேர்ந்துள்ள ஒருவர், கொள்கை புரிதல் இல்லாமல் பேசியிருப்பது கூட்டணி அறத்துக்கும், அரசியல் அறத்துக்கும் ஏற்புடையது அல்ல.
இடதுசாரி சிந்தனையைத் தாண்டி தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய அரசியல் புரிதலைக் கொண்டுள்ள திருமா இந்தக் கருத்தை ஏற்கமாட்டார். நிச்சயமாக இந்தக் கருத்துக்கு எதிரான நிலைபாட்டை அவர் எடுப்பார். இந்தக் கருத்தை அவர் ஏற்கக்கூடாது என்று நான் அவருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றார்.
கடந்த ஜனவரியில் திருச்சியில் நடந்த விசிகவின் வெல்லும் ஜனநாயகம் மாநாட்டில் வைத்து விசிகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, அடுத்த சில நாட்களில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.