கர்நாடக அரசின் நடவடிக்கையை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது: ஸ்டாலின்

தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டு கர்நாடகா அரசு விடுவிக்காததால் வேளாண் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது
கர்நாடக அரசின் நடவடிக்கையை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது: ஸ்டாலின்
ANI
1 min read

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தலைமையேற்றார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். கூட்டத்தின் இறுதியில் முதல்வர் ஆற்றிய உரை பின்வருமாறு:

`காவிரியில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை வழங்க கர்நாடகா அரசு மறுத்து வருகிறது. இதை முறியடித்து தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டி காவிரி டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பல ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இங்கு நீங்கள் தெரிவித்திருக்கிறீர்கள். இதற்காக என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டுக்கு சட்டப்பூர்வமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டு கர்நாடகா அரசு விடுவிக்காததால் வேளாண் மக்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து உச்சநீதிமன்றத்தை நாடி நாம் நீரைப் பெற்றோம்.

இந்த ஆண்டில் தென்மேற்குப் பருவமழை சாதகமாக இருக்கும் சூழலிலும் கர்நாடகா அரசு இவ்வாறு நடந்து கொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவுகளை நான் தீர்மானங்களாக படிக்கிறேன்.

1)    காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும் மாண்பமை உச்ச நீதிமன்றம் 16.02.2018 அன்று அளித்த தீர்ப்பையும் அவமதிக்கும் வகையில், காவிரி ஒழுங்காற்று வாரியம் தற்போது ஆணையிட்டுள்ளவாறு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரமுடியாது என்று மறுத்துள்ள கர்நாடகா அரசுக்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

2)    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்ச நீதிமன்றம் ஆணையின்படி தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை உடனடியாக விடுவித்தாக கர்நாடகா அரசுக்கு ஆணையிடுமாறு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தினை இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வலியுறுத்துகிறது.

3)    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் மாண்பமை உச்ச நீதிமன்றம் ஆணையின்படி தமிழ்நாடு பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு மாண்பமை உச்ச நீதிமன்றத்தை நாடி சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தக் கூட்டம் ஒரு மனதாக தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானங்களின் அடிப்படையில் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முழுமூச்சோடு மேற்கொண்டு காவிரி டெல்டா விவசாயிகள் உரிமைகளை இந்த அரசு நிலைநாட்டும்’.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in